தனித்தமர்ந்து
கரித்துக்கொண்டிருக்கும் ஆதவன்,
கீற்றசைத்து
இன்னொரு தென்னையை அழைக்கும்
ஒரு தென்னை,
தான் அங்கிருப்பதை
எங்கிருக்கும் ஒன்றுக்கோ
முரசுறைக்கும் தோப்புக்குயில்,
இன்னொருவரின் வருகையை
வாய்பிளந்து வரவேற்கும்
ராட்சத கிணறு,
உன்னைக்காட்டிலும் பெரியவன் நான்
அருகிலிருக்கும் கடலைக்காட்டிடம்
எள்ளி நகைந்தாடும் சோளக்காடு,
அதற்கு கொஞ்சமதிகம்
இதற்கு குறைவென்ற
பாரபட்சம் பாரா
வயல்களுக்கு நீர் பட்டுவாடா செய்யும்
வாய்க்கால் வரப்புகள்,
குரைத்துத்துரத்த
ஒரு எளியவனைத் தேடி
நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும்
தோட்டத்து நாய்கள்,
அழகிய அந்த இயற்கைக்கு
திருஷ்டி பொம்மையாய்
களை பிடுங்கும்
அழுக்கடைந்த பெண்கள்,
வரப்போர குடிசையில்
மண்சட்டிச்சோறு பொங்கும்
செல்லாயிப்பாட்டி,
கொடுத்ததற்கெல்லாம் சேர்த்து
அப்புறம் பெண்டை நிமிர்த்துவிடுவான்
என்ற சூட்சமமறியா
வைக்கோலை ருசித்து ரசித்து
உண்ணும் காளை மாடுகள்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
இந்தகவிதையை
கிராமத்தின் படம் வரைந்து
பாகங்கள் குறியென்ற
உங்கள் பேரன் பேத்திகளின்
பள்ளிப்புத்தக வினாக்களுக்கு
விடையளிக்க இது தேவைப்படலாம்.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com
Friday, July 4, 2008
Subscribe to:
Posts (Atom)