Thursday, July 3, 2008

நின்று போன தரிசனங்கள்



நமது சண்டைகளில் நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடித் துகள்களைக் கேட்டால்
அது கதறிச்சொல்லும்
நமதுறவின் சிதறாத உறுதிப்பாட்டை

நமது கோபங்களில் சிக்கிச்சீரழிந்த
தலையணைகள் கூறும்
நமது பந்தங்களின் நெருக்கமான
கன அழுத்தத்தை

மாட்டிவிட்டுத்தான் மறு வேலையென்று
அப்பாவின் வருகை பார்த்து
நீ அழுது வடித்த கண்ணீரை தாங்கிய
நமது வீட்டு முற்றம் சொல்லும்
வடியாத நமதன்பின் தேக்கங்களை

நீ தூங்குகையில் நானும்
நான் தூங்குகையில் நீயும்
ஒருவொருக்கொருவர் மாற்றி
மீசையிட்டுக்கொண்ட
பேனா பறைசாற்றும்
கசடறியா நம் தெய்வீக முகங்களை

நேற்று வந்த ஒருவனுக்காய் நீயும்
இன்று வந்த ஒருத்திக்காய் நானும்
நமது பிரியங்களின் ஒரு சதவீதத்தை
குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற
ஜீரணிக்க முடியா சில நிதர்சனங்களில்
நின்றுபோகின்றன நமது தரிசனங்கள்

அடுத்த ஜென்ம நம்பிக்கையை
அனுவளவு அடைந்திருப்பின்
கை கூப்பி உனை கேட்டிருப்பேன்
அதிலாவது பிரிவொன்றை ஏற்கா
தொப்புள் கொடி உறவை
வரமாய் வாங்கி வாவென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

No comments: