Sunday, July 13, 2008

ஆஆஆஆஆஆஆஆசை






வாட்ட சாட்டமாய்
கொஞ்சம் புது நிறமாய்
பற்கள் எடுப்பாய்
என்றெல்லாம்
வர்ணிக்கமுடியா வஸ்துவது

நீட்டி மடக்கி வகுக்கும்
அளவுகளுக்குள் எல்லாம் அது
அடைந்து போவதில்லை

கடாசி எறியும்
கடவுத் தேதிகளும்
அதற்கில்லை

நாடி பிடித்து
நாளையைச் சொல்லும்
நாதர்கள் கூட
அதைப் பற்றி பேசுவதில்லை

கெஞ்சி கூத்தாடும்
சிறுபிள்ளையாய் சிலநேரம்

செய்து முடியென்ற
உரிமைக் கட்டளைகளின்
மொத்த உருவமாய் பல நேரம்

கத்தி முனையில்
காரியம் வாங்கும்
கள்வனாய் வெகு நேரம்

இப்படியாய் ஜனிக்கும்
அவற்றின் பல அவதாரங்கள்
தசாவதாரங்களையும் தாண்டி

மண்ணை வென்றவனும்
பொன்னை வென்றவனும்
அவர்களின் ‘என்னை’ வென்றவன்
எவனுமில்லை

அதைத்தான் அழிவின்
மூலப்பொருளென்ற புத்தனும் கூட
துறக்க வழி சொன்னான்
அழிக்க வழி தெரியாமல்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி


1 comment:

ஹேமா said...

ஆசைக்கு ஒரு அற்புத இலக்கணம் உங்கள் கவிதையாக.