Wednesday, November 19, 2008

கெஞ்சுதல்கள்

"ம்" தொடங்கு
நெற்றி சுளித்த பாசாங்கு வேண்டாம்
கன்னம் அரிந்த பாவனை போதும்
மலர்ந்து நிற்கும் வீட்டு ரோஜா பற்றி
வழியிலறுந்த வலது செருப்பு வார் பற்றி
சலனமற்றுக் கரைந்த வார விடுமுறை பற்றி
தலைப்பு முக்கியமல்ல
இதழோரம் வார்த்தை கரைந்தோட வேண்டுமென்பது
அதி முக்கியம் எனக்கு
செவி கீறும் தூரத்து மேளச் சப்தங்கள்
முழங்கிப் போகட்டும் பரவாயில்லை
அடுத்து அணைத்து அமர்ந்திருக்கும்
மீறிய வருங்கால தலைவனால்
மருகும் வருங்கால தலைவியின்
முக்கலும் திக்கலுமான கலவிச் சப்தங்கள்
பரவாயில்லை நீ போனதும் கவனிக்கிறேன்
"ம்" சீக்கிரம்
வெற்று உளரல்களாயினும் சிரம் தாழ்த்துகிறேன்
வடகிழக்காயும் தென் மேற்காயும்
சுழன்றாட வேண்டும் உன்னடி நா
அதன் விசையழுத்தப்பட்ட உந்துதல்களில்
வட்டமாயும் சதுரமாயும் செவ்வகமாயும்
வடிவமேற்கவேண்டும் உன்னிதழ்
விரல் தீண்டா பரணி வயலினாய்
உன் வார்த்தையின் எச்சிலீரம் வேண்டி
என்னோடு காய்ந்து கிடக்கிறது காற்றும்
உன் நுனி நாக்குக் குழிப்பரப்பில்
சரி எனக்காய் இல்லாமலிருந்து போகட்டும்
அர்த்தமின்றி அவதானித்திருக்கும் அந்திப் பொழுதுகள்
அர்த்தமாகிப் போகட்டும்
பொதியாய் உன் வார்த்தைகள் சுமந்து
அவிழ்த்துப் போடு
உன் மௌன முடிச்சுகளை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

அக்கால ஆனந்தங்கள்

அது அந்தக் காலம்
கூரைக் கீற்று வழி மோகித்து
சிமிட்டொளிரும் நட்சத்திரங்களில்
சலனற்றுக் கரைந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
உச்சியில் உச்சந்தலையுரிக்கும்
வெயிலுக்கிரக வெம்மைகளின் கீழ்
இன்னும் திடமாய் ஊன்றுகிறேன்

அது அந்தக் காலம்
இடுப்பில் வழியும் சிறகடித்து
காற்று வழி மேகங்களினூடே
கனமற்றுத் திரிந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
கணம் வடியும் கவலைகள் சுமையள்ளி
ஏற்கவியலா எடைச் சுமையில்
தொப்பென்று விழுந்து செல்கிறேன்

அது அந்தக் காலம்
தேனொழுகும் நாவுகள் சூழ
ஆறிய தேநீர் குவளையேந்தி
அவரவர் அப்பட்டங்களை
அவிழ்ந்து கொண்ட காலம்
இப்படிச் சொல்லியபடியே
தாழ்த்தும் செவிகளின்றி
தனிமைச் சாளரங்களினூடே
வெறுமை வடியுமிதயத்தில்
இரகசியங்களள்ளித் திணிக்கிறேன்

அது அந்தக் காலம்
இதமாய் இழையோடும்
இளையராஜா இடைக்கால ராகங்களில்
இதயம் கரைந்தொழுகிய காலம்
இப்படிச் சொல்லியபடியே
கதறிக் காதுடைக்கும்
கானா ஒலியை
உச்சஸ்தாயில் ஒலி நீட்டி
உடல் சுருக்கி உறங்கிப் போகிறேன்

கால நீட்சிக் கரைவுகளில்
கரைந்தோடுபவர்கள் நாங்களல்லரென்று
இறுக்கிப் பிடித்தமர்ந்திருப்பவர்களையும்
இடம் பொருள் கால ஏவல்கள்
ஒரு கை பார்த்து விடுகின்றன.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

அக்காலக் காலைப் பொழுதுகள்

ஆயிரத்தெட்டு மதுக் குப்பிகள் சேர்ந்து
பிணைந்து கூடிக் கலந்த போதையை
இரண்டு கண்களில் இறுக்கித் திணித்து
கை கொட்டிச் சிரிக்கும் காலைப் பொழுதுகள்
சோம்பலானது தூங்கியெழுந்தவன் போலவே
இரவில் எட்டி இழுத்த போர்வையை
இறக்க ஆரம்பித்திருப்பான் சூரியன்
பாதியுறக்கம் இடறிய காட்டத்தால்
வெளித்துச் சிவந்திருக்கும் கண்களோடு
இறங்கிய கொண்டை ஏற்றி நிறுத்தி
நெட்டி முறித்த சேவல்கள்
துவக்கியிருக்கும் தங்கள் கூவல்களை
பூஜ்யம் ஒன்றாகி
ஒன்று ஐந்தாகி
ஐந்து பத்தாகி
சிறுந்தூறல்கள் வலுத்த பெரு மழையாய்
தெருவில் பெருகிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்
கறுமையடர்ந்த இல்லத்தறைகளை
சாத்தப்பட்ட ஜன்னல் பொந்துகளினூடே
வெள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள்
என்னைத் தவிர எல்லாம் எழுந்ததாய்
கால்மாட்டிலமர்ந்து கெஞ்சுமம்மாவை
பொய்யளாக்கும்
அடுத்துறங்கும் அக்காளை எழுப்பும்
அப்பாவிற்கான கூப்பாடுகள்
ஐயா ராசா செல்லம்
கோப்பையில் வழியும் தேநீரோடு
அவளுதடுகளில் வழியும் வார்த்தைகள்
எத்தனைக் காலைகள் கண்டும்
இதமளிக்கவில்லை எக்காலைகளும்
அக்காலைகளைப் போல்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

முதலாளி

காய்த்த உன் ரேகைகளால்
நெட்டி நிமிர்த்தப்படுகின்றன பல ஜாதகங்கள்
நெல்லுக்கலையும் ஜோசியக் கிளியாய்
கணித்துவிட்டு முடங்கிப் போகிறாய் நீ
நாளை விழக் கிடக்கும் நாலு சுவற்றுக்குள்
காற்றிறைத்த உள்ளங்கை சாத மணலை
உன் எலும்புக்கூட்டு மூச்சிலுத்து ஊதுகையில்
உன் கறி சேர்ந்த நாலு கறியிலொன்றை
நாசூக்காய் யோசித்தெடுப்பான் அவன்
மெலிந்த தேகத்து மேலஸ்திரம் உருவுகையில்
செருப்பிறைத்த கரும் புள்ளிக்காய்
கலங்கும் அவன் கண்கள்
தேனொழுகும் அவனகன்ற வாயில்
இம்மியளவும் மெய்யொழுகாது
வரும்படி வரவில் வாய் பிளந்து
வலது கை நீதானென்பான்
உதறிச் செல்வான் செல்கையில் செருப்பாய்
அதி அத்தியவாசியமல்லாதிற்காய் பல்லிலிக்கையில்
கூலியைக் குறைக்க குடைகிறான் எனக்கொள்
வீட்டுச் செல்லப் பிள்ளையெனும் அவன் பெண்டீர்
சீனியும் சீமையெண்ணையும் ரேஷனிடுகையில்
மறுநாள் அவ்வாசல் வரை விட்டால்
பூர்ண ஜென்ம புண்ணியமென மகிழ்
கறியும் கூட்டும் தேடி வந்து திணிக்கும்
நல்ல பழக்கம் வாய்க்கும் எப்பொழுதாவதளுக்கு
கூடி மிஞ்சிய இரண்டாம் நாளாணமாகிப் போனன்று
உடைந்த உள்ளமொட்டித் தேற்றிக்கொள்
உராய்கையில்தான் உயர்கிறீர்கள்
நீயும் சந்தனமும்.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ