அது அந்தக் காலம்
கூரைக் கீற்று வழி மோகித்து
சிமிட்டொளிரும் நட்சத்திரங்களில்
சலனற்றுக் கரைந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
உச்சியில் உச்சந்தலையுரிக்கும்
வெயிலுக்கிரக வெம்மைகளின் கீழ்
இன்னும் திடமாய் ஊன்றுகிறேன்
அது அந்தக் காலம்
இடுப்பில் வழியும் சிறகடித்து
காற்று வழி மேகங்களினூடே
கனமற்றுத் திரிந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
கணம் வடியும் கவலைகள் சுமையள்ளி
ஏற்கவியலா எடைச் சுமையில்
தொப்பென்று விழுந்து செல்கிறேன்
அது அந்தக் காலம்
தேனொழுகும் நாவுகள் சூழ
ஆறிய தேநீர் குவளையேந்தி
அவரவர் அப்பட்டங்களை
அவிழ்ந்து கொண்ட காலம்
இப்படிச் சொல்லியபடியே
தாழ்த்தும் செவிகளின்றி
தனிமைச் சாளரங்களினூடே
வெறுமை வடியுமிதயத்தில்
இரகசியங்களள்ளித் திணிக்கிறேன்
அது அந்தக் காலம்
இதமாய் இழையோடும்
இளையராஜா இடைக்கால ராகங்களில்
இதயம் கரைந்தொழுகிய காலம்
இப்படிச் சொல்லியபடியே
கதறிக் காதுடைக்கும்
கானா ஒலியை
உச்சஸ்தாயில் ஒலி நீட்டி
உடல் சுருக்கி உறங்கிப் போகிறேன்
கால நீட்சிக் கரைவுகளில்
கரைந்தோடுபவர்கள் நாங்களல்லரென்று
இறுக்கிப் பிடித்தமர்ந்திருப்பவர்களையும்
இடம் பொருள் கால ஏவல்கள்
ஒரு கை பார்த்து விடுகின்றன.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
Wednesday, November 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment