Saturday, July 19, 2008

அலையுங்கள்!அலசுங்கள்!



உள்ளதை உள்ளபடி
உற்று நோக்குவதில்
சிறப்பென்ன உள்ளது!

கிளியை கிளியென்றிருந்தால்
அர்ச்சுனனும் இன்று
அரியா சுனன்தான்

பத்தோடு செல்லும் ஓநாய்களில்
பதினோராவது ஓநாய்
அரபி காட்டுமிராண்டியென்று
சென்றிருந்தால் முஹம்மது
விதி நொந்து
நாம் வீடுகளின்
நாய் தரிக்குமிடங்களிலெல்லாம
ஒரு அரபி நின்றிருப்பான்

அங்கங்கள் குலுங்க
தங்க மாந்தர்தம் செல்ல
கை கால் முளைத்த
இரண்டாம் மனித ஜாதியன்றி
வேறில்லையென்பவனை
ஆண்மையற்றவனென்று
அகிலமும் இகிழுரைக்கும்

பொருளை பொருளாயில்லாமல்
அதன் அருளின்
ஆழம் நோக்குங்கள்

கனம் உருட்டும் சக்கரங்களாய்
மனித கால்களையும்
கனி கொய்யும் துரட்டிகளாக
மனித கரங்களையம்
சுற்றிய உங்களருட்பார்வை
வற்றிப் போகாமல
சுற்ற விடுங்கள்
உலகம் சுற்றி.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி


Wednesday, July 16, 2008

முன் யோசி பின் செய்



கடந்து வந்த பாதைகளை
முதலிலிருந்து துவங்குவதைப் போல்,

சப்பி எறிந்த கொட்டைகளை
தட்டில் ஏந்தி தருவதைப் போல்,

கொஞ்சம் விவரமாகவும்
கொஞ்சம் விகாரமாகவும் வேண்டுமானால்
தொண்டை கக்கிப்போட்ட உணவுகளை
திரும்ப உள்ளுக்கனுப்பவதைப் போல்,

இப்படித்தானிருக்கிறது
இதை விட்டு அதைச் செய்திருக்கலாம்
இதற்கு பதிலாய் அதை படித்திருந்திருக்கலாம்
இவளை விட்டு அவளை கட்டியிருக்கலாம்
இப்படியாய் கழிந்து போன
கால நீட்சிகளை கட்டளைகளுக்கேற்ப
வளைத்துக்கொள்ள முயல்வதும்.

காலச் சக்கர சுழல்களில்
எட்டி விழும் திசைகளும்
ஒட்டி இருக்கும் துணிகளும்
சுற்றி கிடக்கும் சூழ்நிலையும்
கேட்டுப் பெறம் வரமில்லை

விதைகளை உற்பத்திப்பது
மரங்களாயினும்
விளையும் நிலங்களை
காற்றுதான் நிர்ணயிக்கிறது

முட்டி நிற்கும் பாதைகளில்
வந்த வழியை வசையாமல்
வெட்டி எடுத்து பாதை படைப்போம்.

Sunday, July 13, 2008

ஆஆஆஆஆஆஆஆசை






வாட்ட சாட்டமாய்
கொஞ்சம் புது நிறமாய்
பற்கள் எடுப்பாய்
என்றெல்லாம்
வர்ணிக்கமுடியா வஸ்துவது

நீட்டி மடக்கி வகுக்கும்
அளவுகளுக்குள் எல்லாம் அது
அடைந்து போவதில்லை

கடாசி எறியும்
கடவுத் தேதிகளும்
அதற்கில்லை

நாடி பிடித்து
நாளையைச் சொல்லும்
நாதர்கள் கூட
அதைப் பற்றி பேசுவதில்லை

கெஞ்சி கூத்தாடும்
சிறுபிள்ளையாய் சிலநேரம்

செய்து முடியென்ற
உரிமைக் கட்டளைகளின்
மொத்த உருவமாய் பல நேரம்

கத்தி முனையில்
காரியம் வாங்கும்
கள்வனாய் வெகு நேரம்

இப்படியாய் ஜனிக்கும்
அவற்றின் பல அவதாரங்கள்
தசாவதாரங்களையும் தாண்டி

மண்ணை வென்றவனும்
பொன்னை வென்றவனும்
அவர்களின் ‘என்னை’ வென்றவன்
எவனுமில்லை

அதைத்தான் அழிவின்
மூலப்பொருளென்ற புத்தனும் கூட
துறக்க வழி சொன்னான்
அழிக்க வழி தெரியாமல்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி


Saturday, July 12, 2008

ஜாதக விஞ்ஞானிகள



வறண்ட தொண்டையும்
வற்றிய வயிறுமாய்
ஏழாமிட சூரியப்பெயர்ச்சியை
வழியின் விழியாய் எதிர் நோக்கியிருக்கிறேன்
விரதத்தை விலக்கிக்கொள்ள

சுக்கிர உக்கிரமம் தணியட்டுமென்று
இயற்கை உபாதைகளை கூட
அந்தந்த இடங்களில்
அப்படியே இறுக்கியிருக்கிறேன்.

ராகுவும் கேதுவும் சற்று ஒழியட்டுமென்று
வாசல் தட்டிய தாபல்காரனையும்
வாசலோடு வைத்திருக்கிறேன்

மிதுன கோபால்
மேஷ ரமேஷ்
கடக சுந்தர்
நண்பர்களைக்கூட
இப்படித்தான் அழைக்கிறேன்

நெஞ்சைப்பிடித்து சாய்ந்த தந்தையையும்
வராண்டாவில் கிடத்திவிட்டு
சனியின் அனுகூலத்தை
நாட்காட்டியில் மேய்கிறேன்

கணிணியில் நிரல் எழுதும்
விஞ்ஞான யுகத்தில்
கணிணியில் ஜாதகம் எழுதும்
விஞ்ஞான ஜோஸியன் நான்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com



Wednesday, July 9, 2008

மயிரிழையில் மஞ்சம்



ஆடி அசைந்து அலுத்த
பாதி சதைகளும்
அலுப்புத் தட்டாமல் ஆட்டமிடும்
மீதி சதைகளும்
கவ்விப்பிடித்திருக்கின்றன
மொத்த சதைகளை.

ஓட்டம் கண்டே உறைந்து போன
கிழட்டுக் குருதிகளும்
உஷ்ணம் தணியாமல்
உறவாடிக் கொண்டிருக்கும்
அவற்றின் பேரன் பேத்திகளும்
அழுகிப்போகும் பிண்டத்திற்கு
உப்பிட்டுக்கொண்டிருக்கின்றன.

மெதுவாய் முறைத்துச்செல்லும்
சில சம்பிரதாய நினைவுகளும்
அருகில் வந்து எச்சரித்துச் செல்லும்
ஆரம்ப கால பிரயாசைகளும்
இன்னுமா இருக்கிறாயென்று
கூறுபோட்டுச் செல்லும்
சில விரோதிக் கனவுகளும்
நிலுவையிலாகா வண்ணம்
என்னை உயிருடையான் பட்டியிலில்
இன்னும் இழுத்திப்பிடித்திருக்கின்றன.

தொண்டை வரை எவ்வி விட்ட
உயிர்க்கற்றையை
கெஞ்சிக் கூத்தாடி உள் அனுப்பும்
தீவர பணியில் இறங்கியிருக்கின்றன
இவையனைத்தும சேர்ந்து.

பற்றியெரியும் ரோமில்
பிடிலிசைத்த பேதகனாய்
தூரத்தெரியும் ஒருத்தியின் முன்னழகில்
மஞ்சமிட்டக்கொண்டிருக்கும் என் மனதை
என்னவென்று சொல்வது!

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.
junaidhasani@gmail.காம்.

Tuesday, July 8, 2008

உஷ்……….. பேசாதீங்க




அளவு கோல் தேவையில்லை
அவ்வப்போது கடித்துக்கொள்ளும்
நாச்சேதாரமும் இல்லை
ஒன்றுமில்லாததிற்கெல்லாம்
காற்றில் வீணைமீட்டும் அவசியமில்லை
எப்படி பேசுவதன்று
தலையை பிடித்துக்கொள்ளவும்
இப்படியா பேசினேன்று
தலையில் அடித்துக்கொள்ளவும்
அவசியமில்லை
பழைய வார்த்தை
தங்கிப் போயிருக்குமோவென்று
பம்மிப் பேசவும் விம்மி அழுகவும்
தேவையே இல்லை
ஒரு வாசகமென்றாலும்
அது பெரு வாசகமென்று
முச்சந்தியில் நிற்க வைத்து
நாக்கைப்பிடுங்கும் கேள்வி
எப்பொழுது வருமென்று
எதிர்பார்க்கத்தேவையில்லை
உங்கள் நாவுகளே நீண்டு
உங்கள் கழுத்துக்களை
கட்டி நெறிக்கும்
கனவுகளை கண்டிப்பாய்
காணும் அவசியமில்லை
எல்லாவற்றிக்கும் மேலாய்
உள்ளாறும் தீயினால் சுட்ட புண்
ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று
கீழார்களிடமெல்லாம்
தவணை முறையில்
உபதேசம் வாங்கிக்கட்டிக்கொள்ளும்
நிலையெல்லாம் ஏற்படாது
ஒவ்வொரு சாதனைகளுக்குப்பின்
சில மௌனங்களும்
ஒவ்வொரு வேதனைகளுக்குப்பின்
சில நாவுகளும்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்துகொள்ளும்போது.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனி

Friday, July 4, 2008

கிராமச்சொத்து செத்துப்போச்சு

தனித்தமர்ந்து
கரித்துக்கொண்டிருக்கும் ஆதவன்,
கீற்றசைத்து
இன்னொரு தென்னையை அழைக்கும்
ஒரு தென்னை,
தான் அங்கிருப்பதை
எங்கிருக்கும் ஒன்றுக்கோ
முரசுறைக்கும் தோப்புக்குயில்,
இன்னொருவரின் வருகையை
வாய்பிளந்து வரவேற்கும்
ராட்சத கிணறு,
உன்னைக்காட்டிலும் பெரியவன் நான்
அருகிலிருக்கும் கடலைக்காட்டிடம்
எள்ளி நகைந்தாடும் சோளக்காடு,
அதற்கு கொஞ்சமதிகம்
இதற்கு குறைவென்ற
பாரபட்சம் பாரா
வயல்களுக்கு நீர் பட்டுவாடா செய்யும்
வாய்க்கால் வரப்புகள்,
குரைத்துத்துரத்த
ஒரு எளியவனைத் தேடி
நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும்
தோட்டத்து நாய்கள்,
அழகிய அந்த இயற்கைக்கு
திருஷ்டி பொம்மையாய்
களை பிடுங்கும்
அழுக்கடைந்த பெண்கள்,
வரப்போர குடிசையில்
மண்சட்டிச்சோறு பொங்கும்
செல்லாயிப்பாட்டி,
கொடுத்ததற்கெல்லாம் சேர்த்து
அப்புறம் பெண்டை நிமிர்த்துவிடுவான்
என்ற சூட்சமமறியா
வைக்கோலை ருசித்து ரசித்து
உண்ணும் காளை மாடுகள்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
இந்தகவிதையை
கிராமத்தின் படம் வரைந்து
பாகங்கள் குறியென்ற
உங்கள் பேரன் பேத்திகளின்
பள்ளிப்புத்தக வினாக்களுக்கு
விடையளிக்க இது தேவைப்படலாம்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

Thursday, July 3, 2008

நின்று போன தரிசனங்கள்



நமது சண்டைகளில் நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடித் துகள்களைக் கேட்டால்
அது கதறிச்சொல்லும்
நமதுறவின் சிதறாத உறுதிப்பாட்டை

நமது கோபங்களில் சிக்கிச்சீரழிந்த
தலையணைகள் கூறும்
நமது பந்தங்களின் நெருக்கமான
கன அழுத்தத்தை

மாட்டிவிட்டுத்தான் மறு வேலையென்று
அப்பாவின் வருகை பார்த்து
நீ அழுது வடித்த கண்ணீரை தாங்கிய
நமது வீட்டு முற்றம் சொல்லும்
வடியாத நமதன்பின் தேக்கங்களை

நீ தூங்குகையில் நானும்
நான் தூங்குகையில் நீயும்
ஒருவொருக்கொருவர் மாற்றி
மீசையிட்டுக்கொண்ட
பேனா பறைசாற்றும்
கசடறியா நம் தெய்வீக முகங்களை

நேற்று வந்த ஒருவனுக்காய் நீயும்
இன்று வந்த ஒருத்திக்காய் நானும்
நமது பிரியங்களின் ஒரு சதவீதத்தை
குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற
ஜீரணிக்க முடியா சில நிதர்சனங்களில்
நின்றுபோகின்றன நமது தரிசனங்கள்

அடுத்த ஜென்ம நம்பிக்கையை
அனுவளவு அடைந்திருப்பின்
கை கூப்பி உனை கேட்டிருப்பேன்
அதிலாவது பிரிவொன்றை ஏற்கா
தொப்புள் கொடி உறவை
வரமாய் வாங்கி வாவென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

நொந்துதல்களில் வெந்து தொலைப்போம்



குத்தீட்டியால் குருதி வழிய வழிய
குத்தப்படுவதை பிடித்தமென்கிறாயா?

உன்னுடமர்ந்து உரையாடிக்கொண்டே
உன்னை பிணமாய் படுக்க வைப்பவனில்
பாசம் கொல்லப் போகிறாயா?
ஆனால் அவ்விருவருமே கொலைகாரர்கள்.

கத்தக்கூடவியலா கத்தி முனையில்
களவாடப்படுவதை நேசித்துக்கொள்கிறாயா?
இரவு உன்னுடன் படுத்தெழுந்து
அதிகாலையில் அனைத்தையும்
அபகரிக்கப்போகும் சாணக்கியன் ஒருவனை
பூஜித்துக்கொள்ளப் போகிறாயா
ஆனால் அவ்விருவருமே திருடர்கள்

இரு பெரும் மூதேவிகளை விட
மூன்றாம் மூதேவி ஒருவனை
முக்கிய சீதேவியாக்கலாமென்று
மேதாவித்தனமாய் நீ யோசித்தால்
இரு கரம் நீட்டி உனை தூக்கியெடுத்து
பத்திரமாய் அவ்விருவரில் ஒருவரிடம் சேர்த்து
பணப்பெட்டியுடன் பதுங்கிக்கொள்வான்
அந்த மூன்றாம் மூதேவி

ஆபத்பாந்தவனாய் ஒன்று சொல்கிறேன்
எனக்குத்தெரிந்த வரை மட்டுமல்ல
எவருக்கும் தெரிந்த வரை
ஏக மனதான தீர்ப்பும் அதுதான்
உன் வீட்டு ஈசாணி மூலை தேடிப்பிடித்து
வடகிழக்காய் ஒருக்கணித்துப் படுத்து
பேசாமல் விதியை நொந்து கொள்
ஐம்பதாண்டு கால சுதந்திர இந்தியா
வேற்றுமையில் கண்ட ஒற்றுமைகளை விட
நொந்துதல்களில் கண்ட ஒற்றுமை அதிகம்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com