Thursday, July 3, 2008

நொந்துதல்களில் வெந்து தொலைப்போம்



குத்தீட்டியால் குருதி வழிய வழிய
குத்தப்படுவதை பிடித்தமென்கிறாயா?

உன்னுடமர்ந்து உரையாடிக்கொண்டே
உன்னை பிணமாய் படுக்க வைப்பவனில்
பாசம் கொல்லப் போகிறாயா?
ஆனால் அவ்விருவருமே கொலைகாரர்கள்.

கத்தக்கூடவியலா கத்தி முனையில்
களவாடப்படுவதை நேசித்துக்கொள்கிறாயா?
இரவு உன்னுடன் படுத்தெழுந்து
அதிகாலையில் அனைத்தையும்
அபகரிக்கப்போகும் சாணக்கியன் ஒருவனை
பூஜித்துக்கொள்ளப் போகிறாயா
ஆனால் அவ்விருவருமே திருடர்கள்

இரு பெரும் மூதேவிகளை விட
மூன்றாம் மூதேவி ஒருவனை
முக்கிய சீதேவியாக்கலாமென்று
மேதாவித்தனமாய் நீ யோசித்தால்
இரு கரம் நீட்டி உனை தூக்கியெடுத்து
பத்திரமாய் அவ்விருவரில் ஒருவரிடம் சேர்த்து
பணப்பெட்டியுடன் பதுங்கிக்கொள்வான்
அந்த மூன்றாம் மூதேவி

ஆபத்பாந்தவனாய் ஒன்று சொல்கிறேன்
எனக்குத்தெரிந்த வரை மட்டுமல்ல
எவருக்கும் தெரிந்த வரை
ஏக மனதான தீர்ப்பும் அதுதான்
உன் வீட்டு ஈசாணி மூலை தேடிப்பிடித்து
வடகிழக்காய் ஒருக்கணித்துப் படுத்து
பேசாமல் விதியை நொந்து கொள்
ஐம்பதாண்டு கால சுதந்திர இந்தியா
வேற்றுமையில் கண்ட ஒற்றுமைகளை விட
நொந்துதல்களில் கண்ட ஒற்றுமை அதிகம்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

2 comments:

ஹேமா said...

ஜுனைத் உங்கள் தளத்திற்கு முதல் வணக்கம்.உங்களுக்கும் பல நாட்களுக்குப் பிறகு அன்பு வணக்கம்.மனம் நொந்து கவிதை ஒன்று முதல் வெடிப்பாக வெடித்திருக்கு.இன்னும் வெடித்து முளைத்து மரமாகிச் செழித்துத் தளைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

ஜுனைத் ஹஸனி said...

mikka nanri hema ungal waalthukkaluku.