Tuesday, July 8, 2008

உஷ்……….. பேசாதீங்க




அளவு கோல் தேவையில்லை
அவ்வப்போது கடித்துக்கொள்ளும்
நாச்சேதாரமும் இல்லை
ஒன்றுமில்லாததிற்கெல்லாம்
காற்றில் வீணைமீட்டும் அவசியமில்லை
எப்படி பேசுவதன்று
தலையை பிடித்துக்கொள்ளவும்
இப்படியா பேசினேன்று
தலையில் அடித்துக்கொள்ளவும்
அவசியமில்லை
பழைய வார்த்தை
தங்கிப் போயிருக்குமோவென்று
பம்மிப் பேசவும் விம்மி அழுகவும்
தேவையே இல்லை
ஒரு வாசகமென்றாலும்
அது பெரு வாசகமென்று
முச்சந்தியில் நிற்க வைத்து
நாக்கைப்பிடுங்கும் கேள்வி
எப்பொழுது வருமென்று
எதிர்பார்க்கத்தேவையில்லை
உங்கள் நாவுகளே நீண்டு
உங்கள் கழுத்துக்களை
கட்டி நெறிக்கும்
கனவுகளை கண்டிப்பாய்
காணும் அவசியமில்லை
எல்லாவற்றிக்கும் மேலாய்
உள்ளாறும் தீயினால் சுட்ட புண்
ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று
கீழார்களிடமெல்லாம்
தவணை முறையில்
உபதேசம் வாங்கிக்கட்டிக்கொள்ளும்
நிலையெல்லாம் ஏற்படாது
ஒவ்வொரு சாதனைகளுக்குப்பின்
சில மௌனங்களும்
ஒவ்வொரு வேதனைகளுக்குப்பின்
சில நாவுகளும்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்துகொள்ளும்போது.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனி