Tuesday, August 5, 2008

புரியாத பாதைகள்



எதுவும் புலப்படவில்லை
சுற்றியிருக்கும் ஓராயிரம் பாதைகளில்
எந்தப் பாதையை ஏறெடுப்பதென்று

கம்பளம் விரித்தாற் போல்
பவுசாய் தெரியும்
பசேலென்ற பாதைகளெல்லாம்
பாதியில் நின்றும் போகலாம்

பாதையே தெரியாத பல பாதைகள்
கொண்டு போயும் சேர்க்கலாம்

எல்லோரும் செல்கிறார்களென்று
எதிலொன்றோ பயணிக்கப்போய்
எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்கையில்
எல்லோரையும் குறைபட்டு லாபமில்லை.

சொல்லாமல் சென்றடைந்தவனிடம்
சொல்லியிருந்தால் வந்திருப்பேனென்று
நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை.

இப்படி ஏறி அப்படி இறங்கும்
குறுக்குப் பாதை காட்டுங்கள்
கோடி பணம் தருகிறேனென்று
எக்குத்தப்பாய் சிந்திக்கும்
அறிவு ஜீவிகள் ஒரு புறம்

சென்றவன் வந்து
வழி சொல்வானென்று
செல்லும் பாதையில்
கடை விரித்தமர்ந்திருக்கும்
மேதாவிகள் மறு புறம்

பாதையில் வாய்த்துவிட்டதென்பதற்காய்
கல்லிடமும் மரத்திடமும்
வழித்தடம் கேட்டு புரளும்
மகா மேதாவிகள் மத்தியப் புறம்

பாதசாரிகளை இம்சிக்கா
அவரவர்களின் எந்தப் பாதையும்
நல்ல பாதையென
நானும் நாலு வார்த்தை
சொல்லப் போனால்
என்னிடமும் ஒருவன் வருகிறான்
மாலையைத் தூக்கிக்கொண்டு
நீங்கள்தான் எனக்கு
நல்லதொரு வழியை காட்டவேண்டுமென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



அடை முட்டைகள்

எதிர் பாராதவாறு
காதுகளில் அறையப்படும்
எதிராளிகளின் சில வார்த்தைகள்
அப்படியே புடம் போட்டு
அமர்ந்து கொள்கின்றன

அவ்வப்போது வலியைக் கூட்டி
இருத்தலை உணர்த்தும் ரணங்களாய்
உடற்கூறுகளில் ஊடுருவிப் போய்
உறுத்திக்கொண்டே இருக்கின்றன

இருந்த போதும் நொந்து கொண்டு
இல்லாத போது வெந்து கொண்டு
இப்படியாய் சராசரி வாழ்க்கை
ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருப்பினும்
அந்த வார்த்தைகள் மட்டும்
சற்று முன் மூட்டிய தணலாய்
கொட்ட கொட்ட விழித்திருக்கின்றன

அவ்வப்போது வாழ்வில் நிகழும்
பெருத்த ஏற்றங்களுக்கு கூட
அவ்வார்த்தைகள் சமாதானமடைவதில்லை

வீறிட்டு அழும் குழந்தையை
தேற்றும் கிலுகிலுப்பைகளாய்
தற்சமய சரிகட்டுதல்களுக்கெல்லாம்
அதன் வீரியம் குறைந்து போவதில்லை

கர்ப்ப காலம் கழிந்த
கருவறைக் குழந்தையாய்...

பூமியைப் பிளந்து பீய்ச்சியடிக்கும்
எரிமலைக் குழம்புகளாய்...

எதிராளியின் முன் தோன்றும்
முழு உருவம் அடையும் வரை
உடலின் உஷ்ணத்திற்குள்
அடை முட்டைகளாகவே
அடங்கிக் கிடக்கின்றன

எவருடைய ஏடாகூட
எக்குத்தப்பான வார்த்தைகளுக்காக
நுனி மூக்கு கோபத்தில்
அவசர வார்த்தைப் பிரயோகம் செய்து
அதை குறை பிரசவமாக்கி விடாதீர்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

விசும்பல்கள்


பகல்களின்
ஆதாயச் சப்தங்களில்
அமுங்கிப் போகின்றன
பாவப்பட்ட சிலர்களின்
பரிதாபத்திற்குரிய
விசும்பல்கள்

ஆதிக்கக்கார அடக்குமுறைகளுக்கும்
கசிந்து வெளியேறும்
மானமிழப்பு அஞ்சுதல்களுக்கும்
ஒத்திவைக்கப்பட்ட விசும்பல்கள்
மீண்டும் மையம் கொள்கின்றன
இமைகள் மூடிக்கொள்ளும்
இரவு நேரங்களில்

உயிர்க் கூடல்களின்
ஏற்ற இறக்க மூச்சுகளும்
நிசப்தம் கலைக்காத
உண்டு தெறித்த
வேட்டை நாய்களின்
இரவு ஊளைகளும்
தாளம் தப்பாமல்
காற்றுக்குத் தாளமிடும்
கதவுகளின்
தட தட சப்தங்களும்
மீண்டுமொரு முறை
அடக்கி வைக்கின்றன
விசும்பல்களை

வானின் நீலங்களாய்
நிலவின் களங்கங்களாய்
ஒட்டிக்கொண்டிருக்கும்
உடலுறுப்புக்களாய்
அப்படியே உறைந்து போய்
பழக்கப்பட்டுப் போகின்றன
அவர்களின் விசும்பல்கள்

எப்பொழுதாவது வழங்கப்படும்
பண்டிகைச் சலுகைகளாய்
அடுக்களை சுவர்களுக்குள்
முடித்துக் கொள்ள மட்டும்
சில விசும்பல்களுக்கு
அனுமதி அளிக்கப்படுகின்றன

விக்கி இழுத்து
உயிர் விடும்
அடிபட்ட பறவையாய்
விசும்பி விசும்பியே
உயிர் நீத்த
அல்பாயிசுக்காரர்களின்
துக்கம் கேட்கச் செல்கையில்
காதுகளை கொஞ்சம்
கூர் தீட்டிக் கொள்ளுங்கள்
காதுடைக்கும்
ஒப்பாரி சப்தங்களோடு
சில விசும்பல் ஒலிகளும்
காற்றில் கரைந்து வரக்கூடும்.



எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



காவு கொள்ளும் கண்கள்



கொல்லைப் புறங்களில்

நுழைந்து வெளியேறும்

சில கூடாத ஆசாமிகளாய்

இதயங்களை விட்டு விட்டு

கண்களின் வழியாக

உள்ளுக்கிறங்குகின்றன

சில காட்சிகள்



தரம் பிரித்து

தூசி தட்டி

மூளைக்கு அனுப்பும்

வண்ணான் பணி பற்றியெல்லாம்

கண்கள் கசக்கிக் கொண்டிருப்பதில்லை

தங்கள் மூளைகளை



காட்சிகளின்

முதல் பரிணாமங்களையும்

இறுதி முடிவுரைகளையும்

மூன்றாந்தர விஷயமாகத்தான்

கண்களின் கண்களில் படுகின்றன



காட்சியின் தத்ரூபம் பற்றிய

உள்ளம் எடுத்துரைக்கும்

உபதேசத்துக்கெல்லாம்

கண்கள் தாழ்த்தி விடுவதில்லை

தங்கள் காதுகளை



இருத்திக் கொண்ட

காட்சிகள் வழியே

விறு விறுவென்று

தன் கால்களை அசைத்து

பயணப்பட்டு விடுகின்றன

கண்கள்

பாதி பாதையில்

பாதை முடிந்த பிறகும்

உடுத்தியிருக்கும்

மேல் சட்டையாய்

தங்கள் பழிகளை

உருவிக் கொண்டு

கூசாமல்

இன்னொரு பயணங்களை

தேட ஆரம்பித்து விடுகின்றன



அறியாத புரியாத ஒருவன்தான்

எங்கிருந்தோ விரோதியாய்

குதிக்க வேண்டிய

அவசியங்களெல்லாம் இல்லை

சதா உங்களுக்காய்

அழுது வடிவதாய்

சொல்லிக் கொண்டிருக்கும் கண்கள்தான்

தேரிழுத்து தெருவிலிடும் பணிகளை

கச்சிதமாய் செய்து முடிக்கின்றன.



எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி