Wednesday, July 16, 2008

முன் யோசி பின் செய்



கடந்து வந்த பாதைகளை
முதலிலிருந்து துவங்குவதைப் போல்,

சப்பி எறிந்த கொட்டைகளை
தட்டில் ஏந்தி தருவதைப் போல்,

கொஞ்சம் விவரமாகவும்
கொஞ்சம் விகாரமாகவும் வேண்டுமானால்
தொண்டை கக்கிப்போட்ட உணவுகளை
திரும்ப உள்ளுக்கனுப்பவதைப் போல்,

இப்படித்தானிருக்கிறது
இதை விட்டு அதைச் செய்திருக்கலாம்
இதற்கு பதிலாய் அதை படித்திருந்திருக்கலாம்
இவளை விட்டு அவளை கட்டியிருக்கலாம்
இப்படியாய் கழிந்து போன
கால நீட்சிகளை கட்டளைகளுக்கேற்ப
வளைத்துக்கொள்ள முயல்வதும்.

காலச் சக்கர சுழல்களில்
எட்டி விழும் திசைகளும்
ஒட்டி இருக்கும் துணிகளும்
சுற்றி கிடக்கும் சூழ்நிலையும்
கேட்டுப் பெறம் வரமில்லை

விதைகளை உற்பத்திப்பது
மரங்களாயினும்
விளையும் நிலங்களை
காற்றுதான் நிர்ணயிக்கிறது

முட்டி நிற்கும் பாதைகளில்
வந்த வழியை வசையாமல்
வெட்டி எடுத்து பாதை படைப்போம்.