Sunday, October 26, 2008

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மயிரில் மையிட்டு
உயிரில் பொய்யிட்டு வைக்கும்
நாகரீக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மூடிக் கிடத்தல்களை விட
ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து
அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண
அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வடித்துத் தீர்த்துக் களைத்த
இல்லாதார் வியர்வையுறிஞ்சி
உன் பித்தட்டிட்டு நிரப்பும்
உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்
பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்
மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு
வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்
அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே
இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே.

அருட்காட்சியகத்தில் பேனா

புதனுக்கும் புளுட்டோவிற்கும்
நகர விமானங்களில் நசுங்கிச் செல்லும்
முப்பத்தியோ நாப்பத்தியோ ஒரு நூற்றாண்டில்
மனிதங்களை எந்திரங்கள்
கட்டி மேய்த்து நெறிப்படுத்தியனுப்பும்
ஏறிய தலை ஏறியபடியிருக்கும்
எண்ணற்ற ஓர் அடுக்குமாடியொன்றில்
தனியாளாய் தம்பட்டமின்றி
கண்ணாடிப் பெட்டகத்தில்
சாய்ந்த படி நின்றிருக்குமது
மூடியைத் தொலைத்து
மழுங்கிய முனையில்
சீரற்று விரிந்த விரிசல்களுடன்
மூலைத் துணையில் முடங்கியிருக்குமதை
அநேகமாய் அது அந்தக் காலத்தவர்களின்
ஆயுதமாயிருந்திருக்கலாமென்பான்
எல்லாம் தெரிந்தவன் நானெனும்
என்னைப் போல் ஒருவன்
அப்படியெல்லாமில்லை!
அதனடியில் ஏதோ திரவமிட்டு
அவ்வப்போதைய நிகழ்வுகளை இருத்திக் கொள்ள
அறிவியலறியாத இருபத்தியோராம் நூற்றாண்டு
அப்பாவி மக்களின் அழகு படைப்பிது
பதியப்பட்டதை ஒப்பித்துக் கொண்டிருப்பான்
நிரலெழுதப்பட்ட எந்திர மனிதனொருவன்
எத்தனை காவியம் படைத்தும்
எதுவும் மிஞ்சா பயனில்
தன் காவியம் சொல்ல
தனியொரு மனிதன் இல்லையென்று
தன்னந்தனியாய் தனியொரு பாஷையில்
தவித்துப் புலம்பும் அந்த பேனா
அனைத்திற்குமோர் மாதிரியாய்
புள்ளி வைத்துத் துவக்கி விட்டேன் நான்
கணினித் திரையில்
விசைப் பலகை வழி கவிதை எழுத
மன்னிக்கவும்
கவிதை அடிக்க.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ.

Monday, October 6, 2008

அப்பாவி நாவுகள்

காலடி நாவுகள் மட்டுமே
சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை
திரி மட்டும் தீபமாகாததைப் போல்!

பழுத்துக் கனிந்த இதய அறைகளின்
அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன
இதமாய் உரசும் இனிய வார்த்தைகள்

இல்லாத இதய சுவர் மோதி
பிளிறப்படும் எதிரொலிகளில் தோன்றுகின்றன
ஆங்காரர்களின் ஆக்ரோஷ வார்த்தைகள்

நாவுகளை மௌனிக்க விட்டு
பார்வைகளில் பரிமாறிக் கொள்ளும்
பிரியாதார்களின் பிரிய வார்த்தைகள்
அவர்கள் இமைகளிலிருந்து இறங்குகின்றன

இருப்பதாய் இல்லாததைப் பகரும்
வாய் வீரா வேஷர்களின் வார்த்தைகள்
அவர்கள் உதட்டுச் சிவப்பிலிருந்தே
உருவகம் பெறுகின்றன

தீயிட்ட உப்பாய் வெடிக்கும்
கோபக் கணல் வார்த்தைகள்
பிரசவமாகின்றன எதிராளி நாவிலிருந்து

இச்சையின் உச்ச முச்சத்தில்
முந்திக்கொண்ட வரும்
முக்கல் முனகல் வார்த்தைகளின் தோற்றுவாய்கள்
அவரவர்களின் அந்தரங்க உறுப்புகளே!

எந்த உறுப்பு எதைப் பகர்ந்து வைத்தாலும்
பாவம் இந்த நாவைத் துண்டாடுவதாகத்தான்
சொல்லிப் போகிறார்கள் எதிராளிகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.