Tuesday, August 12, 2008

கவிதைக் கலைப்புகள்



எங்கோ விரியும்
கண்களுக்குள் அடங்கா
உள்ளங்களில் நின்று போகும்
ஒற்றைக் காட்சிகள்

மீண்டும் ஒரு முறை
தேடியெடுத்து தூசி தட்டி
இதய நாளங்களுக்கு
அஞ்சலனுப்புகின்றன
எப்பொழுதோ
வேண்டா வெறுப்பாய்
சேமிக்கத் திணிக்கப்பட்டிருந்த
மூளை நரம்புகள்

பெரிய காட்சிகளென்றும்
சிதைந்து போன
தோரணைகளென்றும்
புறக்கணித்தல்களோ
காரணமிடும் ஒத்திப்போடல்களோ அன்றி
அப்படியே இதயமும்
காட்சிகளை தின்று
அதன் சாறை உமிழ்கிறது

சாறைப் பிழிந்து
வார்த்தைகளெடுக்கும்
மற்றொரு வித சுத்திகரிப்புகளில்
அந்தச் சாறுகள்
அலைக்கழிக்கப்படுகின்றன
இதயத்திற்கும் நாவுக்குமாய்.

தோற்றமெடுத்த வார்த்தைகளை
அல்லவைகளை சலித்து
ஏற்றவைகளை குவித்தெடுத்து
துப்புவதற்கு தோதுவாய்
நாவுகள்
தங்கள் நுனிகளில்
சேமித்துக் கொண்டிருக்கும்
அனாயாச சூழல்களில்
ஒலிக்கும் தொலைபேசியும்
அழைக்கும் அலுவல்களும்
கதற கதற
அறுத்துப் போடுகின்றன
முக்கால் வாசி ஜனித்துப் போன
பச்சிளங் கவிதைகளை.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.