Monday, October 6, 2008

அப்பாவி நாவுகள்

காலடி நாவுகள் மட்டுமே
சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை
திரி மட்டும் தீபமாகாததைப் போல்!

பழுத்துக் கனிந்த இதய அறைகளின்
அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன
இதமாய் உரசும் இனிய வார்த்தைகள்

இல்லாத இதய சுவர் மோதி
பிளிறப்படும் எதிரொலிகளில் தோன்றுகின்றன
ஆங்காரர்களின் ஆக்ரோஷ வார்த்தைகள்

நாவுகளை மௌனிக்க விட்டு
பார்வைகளில் பரிமாறிக் கொள்ளும்
பிரியாதார்களின் பிரிய வார்த்தைகள்
அவர்கள் இமைகளிலிருந்து இறங்குகின்றன

இருப்பதாய் இல்லாததைப் பகரும்
வாய் வீரா வேஷர்களின் வார்த்தைகள்
அவர்கள் உதட்டுச் சிவப்பிலிருந்தே
உருவகம் பெறுகின்றன

தீயிட்ட உப்பாய் வெடிக்கும்
கோபக் கணல் வார்த்தைகள்
பிரசவமாகின்றன எதிராளி நாவிலிருந்து

இச்சையின் உச்ச முச்சத்தில்
முந்திக்கொண்ட வரும்
முக்கல் முனகல் வார்த்தைகளின் தோற்றுவாய்கள்
அவரவர்களின் அந்தரங்க உறுப்புகளே!

எந்த உறுப்பு எதைப் பகர்ந்து வைத்தாலும்
பாவம் இந்த நாவைத் துண்டாடுவதாகத்தான்
சொல்லிப் போகிறார்கள் எதிராளிகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.