Wednesday, September 24, 2008

இருண்ட காலம்

சுழலும் மின்விசிறியில்
இரைந்து கொண்டிருக்கின்றன
உன் நியாபகங்கள்

அணைக்கப்பட்ட மின் விளக்குகளில்
அணையாமல் சுடரிட்டுக்கொண்டிருக்கின்றன
நம் அந்தக் கால அந்திமங்கள்

வண்டூரும் சப்தங்களும்
மாட்டிகளிலிடப்பட்ட ஆடைகள்
உராயும் சப்தங்களும்
செவிப்பறைகளில் வந்து விழும்
அன்னியோன்யமற்ற அமைதிகளில்
ஆர்ப்பரித்த காலமெல்லாம்
அது ஒரு காலமென்றாகிப் போனது

கதறும் அலாரச் சப்தங்களும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கரைந்து குரைத்து உறுமிச் செல்லும்
இரவு ஜுவிகளின்
இணக்கமற்ற இம்சைகளும்
ஒரு கணமாச்சும் எனனை திசை திருப்ப
ஓராயிரம் மறை படுத்தித்தான் எடுக்கின்றன

விட்டம் பார்த்து குத்திட்ட கண்கள்
புரளலின்றி நேர்த்தியான் நீட்டலில்
அம்சமாய் அடங்கியிருக்கும் உடல்
தொடையேறிய இரவாடையையும்
இழுக்க மறந்து
இறுக்கிப் பிடித்தமர்ந்திருக்கும் கரங்கள்
ஏறக்குறைய பிணத்தின் சாயலென்றாலும்
தொண்டைக்கும் வயிற்றுக்குமான
இடைப்பட்ட பகுதி மட்டும்
இன்னும் இல்லையென்றிருக்கிறது

கண் இறுக்கி மூடிய பின்னும்
இமைகளின் உட்புறத்தில் ஒளிந்து நிற்கிறாய்
இம்சித்தல் எங்கள் குலத்தொழிலென்று
கொக்கரித்தபடி

ஒவ்வொரு முதல் காதலிக்குப் பின்னும்
ஒவ்வொரு இரண்டாம் காதலிக்கு முன்னும்
இடைப்பட்ட இப்படியான இருண்ட காலங்கள்
இம்சிக்காமல் விடுவதில்லை
இப்படியான முதல் காதலர்களை.



எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.