Wednesday, December 24, 2008

கோபம்

வருதலையுணர்த்தியபடி இருக்கும்
பாதச்சுவடுகளோ இன்னும் சலசல ஓசைகளோ
நிரம்பியேற்ற வண்ணம் அவன் வருதலிருப்பதில்லை
விருந்து கழிந்த திருமணப் பந்தியாய்
பனிக்காற்று பாதித்த ஓரிரு மாத சிசுப் பிண்டமாய்
அறியா முகவரியின் நிர்க்கதியற்ற ஏழைக் குடியானாய்
தான் மறைந்தும் மறையாதொரு நோயை
நிறைவாய் நிறுத்திப் போகிறான் எல்லா முறையும்
காரணங்களன்றி அவன் வருதலும்
மா ரணங்களன்றி அவன் செல்தலும் அமைவதில்லை
நாவுகள் முரண்பட்டு மோதும் எந்நேரமும்
சுக்கிரன் உச்சியிலிருப்பான் அவனுக்கு
உருவமற்ற தனியவனாகத்தான் உருப் பெறுகிறான்
எழுச்சியுறும் எப்பொழுதாவதான வேளைகளில்
இரண்டு கைகளில் இறுக்கித் திணித்து விடுகிறான்
இயலுமாக விளையாதோர் அசுர பலத்தை
இரண்டு கால்களும் நமதென்றாலும்
இறுக்கி இருத்தியமர்த்திக்கொண்டிருந்தாலும்
உடைத்துச் சீறிப் புறப்பட்டு விடுகின்றன
அவன் வழிகாட்டுதல்கள் நோக்கி
உக்கிரக போதையிலான தொடர் குடிகாரனாய்
நின்று ஆண்டுச் சென்ற அவனைப் பற்றி
வழிந்தோடிக் கிடக்கும் குருதிகளையும்
சிதறிக் கிடக்கும் இறைச்சித் துண்டுகளையும்
அவன் சென்ற பின்னரே வலியுணர்ந்து
அழுதரற்ற முடிகிறது
இனியுமவனை ஒருமுறையேனும் அண்டச் செய்யேனென்ற
அவன் ஒவ்வொரு செல்கையிலும் தெளியும் புத்தி
மகுடிப் பாம்பாய் பம்மிப் போகிறது
அவன் ஒவ்வொரு வருதலிலும்.

Thursday, December 18, 2008

மரணம்

விரிந்த முடி கோலமாய் குருதியகன்ற விழிகளில்
ஒப்பாரி கலந்த ஓராயிரம் பிராதிட்டுச் செல்வது
எம் குல பெண்களுக்கு வாடிக்கையானது

குண்டு கிழித்த மாமன் மாரில் ஒரு நாள்
வெள்ளமடித்த மகனைப் பாடி மறு நாள்
இடி மடி சேர்ந்த மூப்பெய்யா சகோதரனையும்
பாதைவழிப் பேருந்து பரலோகமிட்ட சித்தப்பனையும்
அடுப்புத் தீயிலோ அல்லாது பிற கடுப்புத் தீயிலோ
தோலுரிந்துத் தொங்கும் ஒரு உறவுக்காரியையும்
இடை இடையே இழுத்து அழுது குறுகிக் குறுத்து
தன் தேவனைப் பாடி காலனைச் சாடி
இறுதியாய் விதியென்று கதி சேர்கையில்
குசலம் கேட்டு குட்டையின் அடி கிண்டுகிறார்கள்
அது ஓய்ந்து கழிந்த அடுத்தடுத்த நாட்களிலும்

கதவிடுக்குகளில் கதறும் காற்றொலிகளில்
இரவின் மௌனமுடைக்கும் ஜந்துக்களான ரீங்காரங்களில்
சூழ்ந்த கதிர்களுக்கு மத்தியிலான கதிரவனில்
மாண்டவர்கள் கரைந்து கொண்டிருப்பதாய்
அலறுகிறார்கள் அவர்களை ஆண்டவர்கள்

அதிக பட்சம் இன்னும் பத்து நாட்கள்
பேரிடி சூழல் அகற்றும் பேறு கால அவகாசங்களைப் போல்
மந்திரமோ தந்திரமோ இரண்டும் சேரா எந்திரமோ!
எதைக்கொண்டாயினும் அம்மரணத்தை
முயற்சியுங்கள் முன்னால் கூற!
ஊனறுக்கும் உரத்தலுக்கு உரித்தாக்கட்டும் தங்களை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
www.junaid-hasani.blogspot.com

Sunday, December 14, 2008

தீவிரவாதம்

நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன
மனித மாமிச வாசனைகள்

என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்

நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன

தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்
எதுவுமற்ற எலும்போட்டுடலில் இணைக்கச் சொல்லி
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று

ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக
நின்று துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி
வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்

இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்

தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று
சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்

இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.

Friday, December 12, 2008

விதி எளியது

இப்பொழுதுதான் விடுபட்டேன்
நொடியில் தோன்றி விர்ரென்று படர்ந்த
மூர்க்கத்தனமான கணங்களில் நின்றும்
அது கழிந்தும் கழியாத வலிச் சுவடுகளில் நின்றும்
வலிக்குப் பின்னாலான சுவடேற்ற தழும்புகளில் நின்றும்
இப்பொழுதான் விடுபட்டேன்

இது இறுதி விடுபடுதலில்லையென்றும்
இன்னும் நீண்டு படரும் அதன் சாணக்கியத்தனமென்றும்
இருவருமே அறிவோம்

இருந்தாலும் தொடரூம் அதன் வழமை
இணங்க மறுக்கும் என் பிடிவாதங்கள்
இறுதியில் சரீரம் அறுத்து வலுத்திணித்தல்களுடன் கூடிய
கொடுமையான கணங்களும் அதன் ரணங்களும்

நானே வென்றதாய் நிமிர்ந்து கொக்கரிக்கும்
ஒவ்வொரு ஆரம்ப கட்டங்களிலும்

ப்பூவென ஊதி வென்றதாய் நகைத்துச் சிரிப்பேன்
கடைசிக் கட்டங்களில் வலியடக்கிக் கொண்டே

இதைத் தாண்டினுமொரு கூரான ஆயுதத் தேடலில்
வெளிப் பறந்து சென்றிருக்கிறது அது
இருந்தாலும் இறுதி வெற்றி எனக்கென்றான
கம்பீர வீற்றிருத்தலில் நான்
இருவருக்குமான ஜெயிப்பு தோப்பாட்டங்களில்
பாவம் உறுப்புகள்தான் தோற்று சோபை குன்றுகின்றன.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

Monday, December 8, 2008

சமூகம்

தெருவெங்கும் அல்லோலப்படுகின்றன
என் பற்றியான பேச்சுக்கள்
தெரு முக்கு பிள்ளையார் சந்நிதி முதல்
கடைசி அய்யனார் வீட்டு வரை
ஒவ்வொரு காற்றுத் துகள்களிலும்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
என் மீதான சாடல்கள்
இவன்தான் அவனென்று
பகிரங்கமாகவே சுட்டுகிறார்கள்
குழாயடிப் பெண்கள் தங்களுக்குள்
மூணுச் சீட்டாடும் வாலிபப் பட்டாளமும்
அடுத்தவர் தொடை சொறிகிறார்கள்
அருகில் வந்து விட்டேனென்று
விரைந்து செல்லும் கால்களும்
என் வீட்டருகில் மந்தப்படுகின்றன
புதிய செய்தி கிடைக்குமாவென்று
நன்றாய் தெரிந்தவர்களில் சிலர்
நிறுத்தி வைத்து குசலம் கேட்கிறார்கள்
இதெல்லாம் கால தேவனின் கட்டாயங்களென்று
அறிவுரைப்பதாய் தொண தொணத்துச் செல்கிறார்கள்
நரை தட்டிய கிழவர்கள்
திரும்ப திரும்ப
திரும்ப திரும்ப
ஆனவற்றை முதலிலிருந்து கேட்டு
வெந்த ரணத்தில் கத்தி கடப்பாறை பாய்ச்சுகிறது
உறவினப் பட்டாளமொன்று
இரண்டொரு நாட்கள் கழிந்து விட்டிருந்தது
சுத்தமாய் அமுங்கிப் போயிருந்தன
என் பற்றியான பேச்சுக்கள்
எத்தனை முறை தெருவில் நடந்தும்
என்னை ஏறெடுக்கவில்லை எவரும்
பரிதாபப்பட்டுக் கொண்டேன்
வசமாய் சிக்கியிருக்கும்
அந்த இன்னொருவனுக்காக.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

உற்றமும் சுற்றமும்

நன்றாய் புன்முறுவலித்து
எழுந்து இருக்கை தந்து
வராதவர்களையும் நலம் கேட்டு
திங்க தங்க வைத்தனுப்பினாலும்
குற்றம் சொல்லி அலைகின்றன சுற்றங்கள்
போஷாக்கில்லாத என் தேகம் பற்றி
மழிக்காத என் தாடி பற்றி
இஸ்திரியிடப்படா என் மேலாடை பற்றி
வஸ்துக்கள் சிதறிக் கிடக்கும்
ஒழுங்கற்ற என்னில்லம் பற்றி
இப்படியாய்
பல்கிப் பெருகிச் செல்கின்றன
அவர்களின் தண்டோராக்கள்
இப்பொழுதெல்லாம்
அரைக் கதவு திறந்து
உதடு விரியா புன்னகையிட்டு
கண்டிப்பாய் வருவதாய்
வெறும் வாய் வேடமிட்டு
கதவறைந்துச் சாத்தி விடுகிறேன்
மேட்டுக்குடியனாய்
வாசலிலேயே வைத்தனுப்பி விட்டானென்ற
ஒரேயொரு குற்றம் சொல்லி
சனியன்கள் தொலைந்து போகட்டுமென்று.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

மழைக் கால ஒரு மாலையில்..

ஒரு பெருமழையொன்றைப் பொழித்து
மிதமிஞ்சிப் போன ஈரங்களை
தூறல்களாய் சொட்டிட்டுக் கொண்டிருந்த
மேகங்கள் ஒளியத் தொடங்கும்
மஞ்சமிக்கும் மாலைப் பொழுதுகளில்
கதவு தட்டுகிறாய்

வீசிப் போன புயலும்
வெளி நனைத்துச் சென்ற மழையும்
முயன்றுத் தோற்றுக் களைத்த
உடலுதறச் செய்யும் ஜில்லிடுதல்களை
உன்னில் சொட்டிடும் துளிகளில்
பெற்றுத் தந்தாய்

சிறு கதையொன்றைச் சிலாகித்து
விரல் பற்றிச் சொடக்கிட்டு
சட்டையில் மறந்த பொத்தானிட்டு
சகலமும் நான் உனக்கென்று
சளைக்கச் சொல்லுகிறாய்

தொண தொணவெனாமலும்
நீண்டதொரு முற்றுமிடாமலும்
ஒவ்வொரு தலைப்புகளில்
ஒவ்வொரு மௌனமிட்டு
சேகரித்து உதிர்க்கிறாய்
நுனி நாக்கு வார்த்தைகளை

வெது வெதுப்பான குளிரின்
மெல்லிய புணர் பொழுதுகளில்
இளஞ் சூட்டுத் தேநீர் சுவையை
மெல்ல உடலில் பாய்ச்சுகிறாய்
என் உள்ளங்கை மீதான
உன் உள்ளங்கை ஸ்பரிசத்தில்

விசாலப்பட்ட மெத்தையிருந்தும்
அகலப்பட்ட போர்வை கிடந்தும்
மெத்தென்ற என் உடலில்
உன்னுடல் வளைத்த என் கரங்களில்
தூங்கிப் போதல் சுகமென்றும்
செத்துப் போதல் மா சுகமென்றும்
சிந்தையுறச் சொல்லுகிறாய்

என் தலை மயிர்க் கோரி
என் காய்ந்த உதட்டிதழ்களில்
உன் எச்சிலீரமிட்டு
சொல்லண்ணா போதையில் கிடத்தி
ஓடி ஒளியும் மாலை மேகங்களோடு
மறைந்து போகிறாய்

அதிகாலைத் தெருக்களில்
இரவு மழையின் மிச்சங்களாய்
இன்னும் காயாமல் கசிகின்றன
உன் இரவு நியாபகங்கள்.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ