Wednesday, August 27, 2008

மறந்த நியாபகம்

எல்லாம் இருந்தும்
இல்லாத ஒன்றின் தேடலில்
கனத்துப் போயிருக்கிறது மனம்

எடுத்து வைத்த எழுதாத பேனா
இல்லாத முடிக்கான
நாகரீக சீப்பு
உட்புறம் காலியான
மதிப்பான கைப் பை
அரசுப் பேருந்துக்காய்
தேடி எடுத்த சில்லறை
திருகலில் பாதியும்
தட்டலில் பாதையுமாய்
மூச்சிரைக்க ஓடும்
ஹைதர் கால கைக் கடிகாகரம்

எல்லாம் அச்சுப் பிசகாமல்
எடுத்து வைத்தும்
ஏதோ ஒன்று இல்லையென்று
இயம்பிக் கொண்டே இருக்கிறது
ஒன்று என்னுள்

வீடு தாண்டி வெகுதூரம்
உடல் பயணப்பட்ட பிறகும்
என் ஆறடி அறையையே
அளந்து கொண்டிருக்கிறது
என் மனம் மட்டும்.

இளித்தவருக்கு இளித்து
சம்பிரதாய விசாரிப்புகளுக்கு
நலம் சொல்லி
என்ன! சாப்பிடவா?
பந்தியில் பார்த்து
அறிவாய் கேட்ட ஒருத்தருக்கு
ஆம் சாப்டத்தான்
மேதாவியாய் பதிலுரைத்து
வேசியாய் என் உடல்
சகலருக்கும்
இசைந்தாடிக் கொண்டிருந்தும்
இரவுக் கோட்டானாய்
என் மனம்
என் அறையின்
மூலை முடுக்கெல்லாம்
மாறி மாறி அமர்ந்து கொணடிருக்கிறது

எதுவும் மறக்கப்படவில்லை
எல்லாம் சரியென்று
எத்தனை முறை
என் இதயத்திற்கு உரைத்தும்
பதறி பதறியே
பழக்கப்பட்டுப் போன இதயம்
பதற்றத்தை தணிக்க மறுக்கிறது
ஒவ்வொரு பயணங்களிலும்.