Monday, December 8, 2008

சமூகம்

தெருவெங்கும் அல்லோலப்படுகின்றன
என் பற்றியான பேச்சுக்கள்
தெரு முக்கு பிள்ளையார் சந்நிதி முதல்
கடைசி அய்யனார் வீட்டு வரை
ஒவ்வொரு காற்றுத் துகள்களிலும்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
என் மீதான சாடல்கள்
இவன்தான் அவனென்று
பகிரங்கமாகவே சுட்டுகிறார்கள்
குழாயடிப் பெண்கள் தங்களுக்குள்
மூணுச் சீட்டாடும் வாலிபப் பட்டாளமும்
அடுத்தவர் தொடை சொறிகிறார்கள்
அருகில் வந்து விட்டேனென்று
விரைந்து செல்லும் கால்களும்
என் வீட்டருகில் மந்தப்படுகின்றன
புதிய செய்தி கிடைக்குமாவென்று
நன்றாய் தெரிந்தவர்களில் சிலர்
நிறுத்தி வைத்து குசலம் கேட்கிறார்கள்
இதெல்லாம் கால தேவனின் கட்டாயங்களென்று
அறிவுரைப்பதாய் தொண தொணத்துச் செல்கிறார்கள்
நரை தட்டிய கிழவர்கள்
திரும்ப திரும்ப
திரும்ப திரும்ப
ஆனவற்றை முதலிலிருந்து கேட்டு
வெந்த ரணத்தில் கத்தி கடப்பாறை பாய்ச்சுகிறது
உறவினப் பட்டாளமொன்று
இரண்டொரு நாட்கள் கழிந்து விட்டிருந்தது
சுத்தமாய் அமுங்கிப் போயிருந்தன
என் பற்றியான பேச்சுக்கள்
எத்தனை முறை தெருவில் நடந்தும்
என்னை ஏறெடுக்கவில்லை எவரும்
பரிதாபப்பட்டுக் கொண்டேன்
வசமாய் சிக்கியிருக்கும்
அந்த இன்னொருவனுக்காக.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

உற்றமும் சுற்றமும்

நன்றாய் புன்முறுவலித்து
எழுந்து இருக்கை தந்து
வராதவர்களையும் நலம் கேட்டு
திங்க தங்க வைத்தனுப்பினாலும்
குற்றம் சொல்லி அலைகின்றன சுற்றங்கள்
போஷாக்கில்லாத என் தேகம் பற்றி
மழிக்காத என் தாடி பற்றி
இஸ்திரியிடப்படா என் மேலாடை பற்றி
வஸ்துக்கள் சிதறிக் கிடக்கும்
ஒழுங்கற்ற என்னில்லம் பற்றி
இப்படியாய்
பல்கிப் பெருகிச் செல்கின்றன
அவர்களின் தண்டோராக்கள்
இப்பொழுதெல்லாம்
அரைக் கதவு திறந்து
உதடு விரியா புன்னகையிட்டு
கண்டிப்பாய் வருவதாய்
வெறும் வாய் வேடமிட்டு
கதவறைந்துச் சாத்தி விடுகிறேன்
மேட்டுக்குடியனாய்
வாசலிலேயே வைத்தனுப்பி விட்டானென்ற
ஒரேயொரு குற்றம் சொல்லி
சனியன்கள் தொலைந்து போகட்டுமென்று.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

மழைக் கால ஒரு மாலையில்..

ஒரு பெருமழையொன்றைப் பொழித்து
மிதமிஞ்சிப் போன ஈரங்களை
தூறல்களாய் சொட்டிட்டுக் கொண்டிருந்த
மேகங்கள் ஒளியத் தொடங்கும்
மஞ்சமிக்கும் மாலைப் பொழுதுகளில்
கதவு தட்டுகிறாய்

வீசிப் போன புயலும்
வெளி நனைத்துச் சென்ற மழையும்
முயன்றுத் தோற்றுக் களைத்த
உடலுதறச் செய்யும் ஜில்லிடுதல்களை
உன்னில் சொட்டிடும் துளிகளில்
பெற்றுத் தந்தாய்

சிறு கதையொன்றைச் சிலாகித்து
விரல் பற்றிச் சொடக்கிட்டு
சட்டையில் மறந்த பொத்தானிட்டு
சகலமும் நான் உனக்கென்று
சளைக்கச் சொல்லுகிறாய்

தொண தொணவெனாமலும்
நீண்டதொரு முற்றுமிடாமலும்
ஒவ்வொரு தலைப்புகளில்
ஒவ்வொரு மௌனமிட்டு
சேகரித்து உதிர்க்கிறாய்
நுனி நாக்கு வார்த்தைகளை

வெது வெதுப்பான குளிரின்
மெல்லிய புணர் பொழுதுகளில்
இளஞ் சூட்டுத் தேநீர் சுவையை
மெல்ல உடலில் பாய்ச்சுகிறாய்
என் உள்ளங்கை மீதான
உன் உள்ளங்கை ஸ்பரிசத்தில்

விசாலப்பட்ட மெத்தையிருந்தும்
அகலப்பட்ட போர்வை கிடந்தும்
மெத்தென்ற என் உடலில்
உன்னுடல் வளைத்த என் கரங்களில்
தூங்கிப் போதல் சுகமென்றும்
செத்துப் போதல் மா சுகமென்றும்
சிந்தையுறச் சொல்லுகிறாய்

என் தலை மயிர்க் கோரி
என் காய்ந்த உதட்டிதழ்களில்
உன் எச்சிலீரமிட்டு
சொல்லண்ணா போதையில் கிடத்தி
ஓடி ஒளியும் மாலை மேகங்களோடு
மறைந்து போகிறாய்

அதிகாலைத் தெருக்களில்
இரவு மழையின் மிச்சங்களாய்
இன்னும் காயாமல் கசிகின்றன
உன் இரவு நியாபகங்கள்.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ