Wednesday, December 24, 2008

கோபம்

வருதலையுணர்த்தியபடி இருக்கும்
பாதச்சுவடுகளோ இன்னும் சலசல ஓசைகளோ
நிரம்பியேற்ற வண்ணம் அவன் வருதலிருப்பதில்லை
விருந்து கழிந்த திருமணப் பந்தியாய்
பனிக்காற்று பாதித்த ஓரிரு மாத சிசுப் பிண்டமாய்
அறியா முகவரியின் நிர்க்கதியற்ற ஏழைக் குடியானாய்
தான் மறைந்தும் மறையாதொரு நோயை
நிறைவாய் நிறுத்திப் போகிறான் எல்லா முறையும்
காரணங்களன்றி அவன் வருதலும்
மா ரணங்களன்றி அவன் செல்தலும் அமைவதில்லை
நாவுகள் முரண்பட்டு மோதும் எந்நேரமும்
சுக்கிரன் உச்சியிலிருப்பான் அவனுக்கு
உருவமற்ற தனியவனாகத்தான் உருப் பெறுகிறான்
எழுச்சியுறும் எப்பொழுதாவதான வேளைகளில்
இரண்டு கைகளில் இறுக்கித் திணித்து விடுகிறான்
இயலுமாக விளையாதோர் அசுர பலத்தை
இரண்டு கால்களும் நமதென்றாலும்
இறுக்கி இருத்தியமர்த்திக்கொண்டிருந்தாலும்
உடைத்துச் சீறிப் புறப்பட்டு விடுகின்றன
அவன் வழிகாட்டுதல்கள் நோக்கி
உக்கிரக போதையிலான தொடர் குடிகாரனாய்
நின்று ஆண்டுச் சென்ற அவனைப் பற்றி
வழிந்தோடிக் கிடக்கும் குருதிகளையும்
சிதறிக் கிடக்கும் இறைச்சித் துண்டுகளையும்
அவன் சென்ற பின்னரே வலியுணர்ந்து
அழுதரற்ற முடிகிறது
இனியுமவனை ஒருமுறையேனும் அண்டச் செய்யேனென்ற
அவன் ஒவ்வொரு செல்கையிலும் தெளியும் புத்தி
மகுடிப் பாம்பாய் பம்மிப் போகிறது
அவன் ஒவ்வொரு வருதலிலும்.