Friday, August 22, 2008

தடயங்கள்

எவருமற்ற அனாயாச சூழல்களில்
இறக்கி விடப்படும்
பாலைவன கால் தடங்களாய்
இருத்தி விடப்படுகின்றன
சிலர்களின்
மறைவுகளுக்குப் பின்னாலான
மிஞ்சிய வாழ்க்கைத் தடயங்கள்!
காற்றோடு சேர்ந்து காலங்களும்
கபளீகரம் செய்து விடுகின்றன
எந்த வடுவையும் மிச்சமிடாமல்

கூடிக் கழித்த பொழுதுகளில்
கற்பாறைச் சிதைவுகளிலோ
வானுயர்ந்த மர மட்டைகளிலோ
உரித்துச் சிதைத்துப் பொறிக்கப்படும்
ஈரடிப் பெயர்களாய்
எந்த ஆக்கப் பூர்வமுமின்றி
வெறும் பெயர்களாய் எஞ்சி நிற்கின்றன
தான்தோன்றினர்களின்
சில தற்புகழ்ச்சித் தடயங்கள்

பருந்துகளும் கோட்டான்களும்
நோட்டமிட்டுத் திரியும்
பழைய பாழ் பங்களாக்களாய்
சோக கீதமிசைத்துத் திரிகின்றன
எல்லாம் பெற்று வாழ்ந்து
எதுவுமற்று மறைந்த
மாண்புமிகுக்கள்
மண்ணில் விட்ட தடையங்கள்

நாலைந்து செந்நாய்கள் கூடி
மிச்சமிட்டுச் சென்ற
பருத்துக் கொழுத்த
பிணத்தின் தடயங்களாய்
உருட்டிப் புரட்டிக் கொழுத்த
ஊளைச் சதைகளின்
பெருகி வலுத்தத் தடையங்களைக் கூட
தின்று தெறித்து ஏப்பம் விடுகின்றன
பிணந் திண்ணி மணல்கள்.

எவரோ எப்போதோ விதைத்து
வளர்ந்து வலுத்து நிற்கும்
உருண்டு திரண்ட ஆலமரமாய்
தன் காலத்திற்கப்பாலும்
நிழலிட்டுக் குளிரூட்டிக் கொண்டிருக்கின்றன
நான் வருத்தி நாம் வளர்த்த
நல்லவர்கள் தடயங்கள் மட்டும்.