Sunday, October 26, 2008

அருட்காட்சியகத்தில் பேனா

புதனுக்கும் புளுட்டோவிற்கும்
நகர விமானங்களில் நசுங்கிச் செல்லும்
முப்பத்தியோ நாப்பத்தியோ ஒரு நூற்றாண்டில்
மனிதங்களை எந்திரங்கள்
கட்டி மேய்த்து நெறிப்படுத்தியனுப்பும்
ஏறிய தலை ஏறியபடியிருக்கும்
எண்ணற்ற ஓர் அடுக்குமாடியொன்றில்
தனியாளாய் தம்பட்டமின்றி
கண்ணாடிப் பெட்டகத்தில்
சாய்ந்த படி நின்றிருக்குமது
மூடியைத் தொலைத்து
மழுங்கிய முனையில்
சீரற்று விரிந்த விரிசல்களுடன்
மூலைத் துணையில் முடங்கியிருக்குமதை
அநேகமாய் அது அந்தக் காலத்தவர்களின்
ஆயுதமாயிருந்திருக்கலாமென்பான்
எல்லாம் தெரிந்தவன் நானெனும்
என்னைப் போல் ஒருவன்
அப்படியெல்லாமில்லை!
அதனடியில் ஏதோ திரவமிட்டு
அவ்வப்போதைய நிகழ்வுகளை இருத்திக் கொள்ள
அறிவியலறியாத இருபத்தியோராம் நூற்றாண்டு
அப்பாவி மக்களின் அழகு படைப்பிது
பதியப்பட்டதை ஒப்பித்துக் கொண்டிருப்பான்
நிரலெழுதப்பட்ட எந்திர மனிதனொருவன்
எத்தனை காவியம் படைத்தும்
எதுவும் மிஞ்சா பயனில்
தன் காவியம் சொல்ல
தனியொரு மனிதன் இல்லையென்று
தன்னந்தனியாய் தனியொரு பாஷையில்
தவித்துப் புலம்பும் அந்த பேனா
அனைத்திற்குமோர் மாதிரியாய்
புள்ளி வைத்துத் துவக்கி விட்டேன் நான்
கணினித் திரையில்
விசைப் பலகை வழி கவிதை எழுத
மன்னிக்கவும்
கவிதை அடிக்க.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ.

No comments: