Tuesday, August 5, 2008

விசும்பல்கள்


பகல்களின்
ஆதாயச் சப்தங்களில்
அமுங்கிப் போகின்றன
பாவப்பட்ட சிலர்களின்
பரிதாபத்திற்குரிய
விசும்பல்கள்

ஆதிக்கக்கார அடக்குமுறைகளுக்கும்
கசிந்து வெளியேறும்
மானமிழப்பு அஞ்சுதல்களுக்கும்
ஒத்திவைக்கப்பட்ட விசும்பல்கள்
மீண்டும் மையம் கொள்கின்றன
இமைகள் மூடிக்கொள்ளும்
இரவு நேரங்களில்

உயிர்க் கூடல்களின்
ஏற்ற இறக்க மூச்சுகளும்
நிசப்தம் கலைக்காத
உண்டு தெறித்த
வேட்டை நாய்களின்
இரவு ஊளைகளும்
தாளம் தப்பாமல்
காற்றுக்குத் தாளமிடும்
கதவுகளின்
தட தட சப்தங்களும்
மீண்டுமொரு முறை
அடக்கி வைக்கின்றன
விசும்பல்களை

வானின் நீலங்களாய்
நிலவின் களங்கங்களாய்
ஒட்டிக்கொண்டிருக்கும்
உடலுறுப்புக்களாய்
அப்படியே உறைந்து போய்
பழக்கப்பட்டுப் போகின்றன
அவர்களின் விசும்பல்கள்

எப்பொழுதாவது வழங்கப்படும்
பண்டிகைச் சலுகைகளாய்
அடுக்களை சுவர்களுக்குள்
முடித்துக் கொள்ள மட்டும்
சில விசும்பல்களுக்கு
அனுமதி அளிக்கப்படுகின்றன

விக்கி இழுத்து
உயிர் விடும்
அடிபட்ட பறவையாய்
விசும்பி விசும்பியே
உயிர் நீத்த
அல்பாயிசுக்காரர்களின்
துக்கம் கேட்கச் செல்கையில்
காதுகளை கொஞ்சம்
கூர் தீட்டிக் கொள்ளுங்கள்
காதுடைக்கும்
ஒப்பாரி சப்தங்களோடு
சில விசும்பல் ஒலிகளும்
காற்றில் கரைந்து வரக்கூடும்.



எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



No comments: