Tuesday, August 5, 2008

புரியாத பாதைகள்



எதுவும் புலப்படவில்லை
சுற்றியிருக்கும் ஓராயிரம் பாதைகளில்
எந்தப் பாதையை ஏறெடுப்பதென்று

கம்பளம் விரித்தாற் போல்
பவுசாய் தெரியும்
பசேலென்ற பாதைகளெல்லாம்
பாதியில் நின்றும் போகலாம்

பாதையே தெரியாத பல பாதைகள்
கொண்டு போயும் சேர்க்கலாம்

எல்லோரும் செல்கிறார்களென்று
எதிலொன்றோ பயணிக்கப்போய்
எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்கையில்
எல்லோரையும் குறைபட்டு லாபமில்லை.

சொல்லாமல் சென்றடைந்தவனிடம்
சொல்லியிருந்தால் வந்திருப்பேனென்று
நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை.

இப்படி ஏறி அப்படி இறங்கும்
குறுக்குப் பாதை காட்டுங்கள்
கோடி பணம் தருகிறேனென்று
எக்குத்தப்பாய் சிந்திக்கும்
அறிவு ஜீவிகள் ஒரு புறம்

சென்றவன் வந்து
வழி சொல்வானென்று
செல்லும் பாதையில்
கடை விரித்தமர்ந்திருக்கும்
மேதாவிகள் மறு புறம்

பாதையில் வாய்த்துவிட்டதென்பதற்காய்
கல்லிடமும் மரத்திடமும்
வழித்தடம் கேட்டு புரளும்
மகா மேதாவிகள் மத்தியப் புறம்

பாதசாரிகளை இம்சிக்கா
அவரவர்களின் எந்தப் பாதையும்
நல்ல பாதையென
நானும் நாலு வார்த்தை
சொல்லப் போனால்
என்னிடமும் ஒருவன் வருகிறான்
மாலையைத் தூக்கிக்கொண்டு
நீங்கள்தான் எனக்கு
நல்லதொரு வழியை காட்டவேண்டுமென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



4 comments:

ஹேமா said...

யார் பாதையும் வேண்டாம்.
எமக்கென்ற பாதையே சிறந்தது.என் அனுபவம் இது.கவிதை கருத்துக்கள் சொல்கிறது.அருமை.

M.Rishan Shareef said...

கவிதை அருமை. பல கருத்துக்களைச் சொல்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)

(பின்னூட்டமிடுகையில் வருகின்ற வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள். அனேகர் கவிதை பற்றிய பின்னூட்டங்களை இடத் தயங்குவார்கள் )

ஜுனைத் ஹஸனி said...

எடுத்து விட்டேன் ரிஷான் அவர்களே. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஜுனைத் ஹஸனி said...

hema thangal warukaiku mikka nanri.