Wednesday, November 19, 2008

அக்காலக் காலைப் பொழுதுகள்

ஆயிரத்தெட்டு மதுக் குப்பிகள் சேர்ந்து
பிணைந்து கூடிக் கலந்த போதையை
இரண்டு கண்களில் இறுக்கித் திணித்து
கை கொட்டிச் சிரிக்கும் காலைப் பொழுதுகள்
சோம்பலானது தூங்கியெழுந்தவன் போலவே
இரவில் எட்டி இழுத்த போர்வையை
இறக்க ஆரம்பித்திருப்பான் சூரியன்
பாதியுறக்கம் இடறிய காட்டத்தால்
வெளித்துச் சிவந்திருக்கும் கண்களோடு
இறங்கிய கொண்டை ஏற்றி நிறுத்தி
நெட்டி முறித்த சேவல்கள்
துவக்கியிருக்கும் தங்கள் கூவல்களை
பூஜ்யம் ஒன்றாகி
ஒன்று ஐந்தாகி
ஐந்து பத்தாகி
சிறுந்தூறல்கள் வலுத்த பெரு மழையாய்
தெருவில் பெருகிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்
கறுமையடர்ந்த இல்லத்தறைகளை
சாத்தப்பட்ட ஜன்னல் பொந்துகளினூடே
வெள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள்
என்னைத் தவிர எல்லாம் எழுந்ததாய்
கால்மாட்டிலமர்ந்து கெஞ்சுமம்மாவை
பொய்யளாக்கும்
அடுத்துறங்கும் அக்காளை எழுப்பும்
அப்பாவிற்கான கூப்பாடுகள்
ஐயா ராசா செல்லம்
கோப்பையில் வழியும் தேநீரோடு
அவளுதடுகளில் வழியும் வார்த்தைகள்
எத்தனைக் காலைகள் கண்டும்
இதமளிக்கவில்லை எக்காலைகளும்
அக்காலைகளைப் போல்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

No comments: