Wednesday, November 19, 2008

கெஞ்சுதல்கள்

"ம்" தொடங்கு
நெற்றி சுளித்த பாசாங்கு வேண்டாம்
கன்னம் அரிந்த பாவனை போதும்
மலர்ந்து நிற்கும் வீட்டு ரோஜா பற்றி
வழியிலறுந்த வலது செருப்பு வார் பற்றி
சலனமற்றுக் கரைந்த வார விடுமுறை பற்றி
தலைப்பு முக்கியமல்ல
இதழோரம் வார்த்தை கரைந்தோட வேண்டுமென்பது
அதி முக்கியம் எனக்கு
செவி கீறும் தூரத்து மேளச் சப்தங்கள்
முழங்கிப் போகட்டும் பரவாயில்லை
அடுத்து அணைத்து அமர்ந்திருக்கும்
மீறிய வருங்கால தலைவனால்
மருகும் வருங்கால தலைவியின்
முக்கலும் திக்கலுமான கலவிச் சப்தங்கள்
பரவாயில்லை நீ போனதும் கவனிக்கிறேன்
"ம்" சீக்கிரம்
வெற்று உளரல்களாயினும் சிரம் தாழ்த்துகிறேன்
வடகிழக்காயும் தென் மேற்காயும்
சுழன்றாட வேண்டும் உன்னடி நா
அதன் விசையழுத்தப்பட்ட உந்துதல்களில்
வட்டமாயும் சதுரமாயும் செவ்வகமாயும்
வடிவமேற்கவேண்டும் உன்னிதழ்
விரல் தீண்டா பரணி வயலினாய்
உன் வார்த்தையின் எச்சிலீரம் வேண்டி
என்னோடு காய்ந்து கிடக்கிறது காற்றும்
உன் நுனி நாக்குக் குழிப்பரப்பில்
சரி எனக்காய் இல்லாமலிருந்து போகட்டும்
அர்த்தமின்றி அவதானித்திருக்கும் அந்திப் பொழுதுகள்
அர்த்தமாகிப் போகட்டும்
பொதியாய் உன் வார்த்தைகள் சுமந்து
அவிழ்த்துப் போடு
உன் மௌன முடிச்சுகளை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

1 comment:

தேவன் மாயம் said...

என்ன கவிதை,வார்த்திகளில் சொல்லமுடியாதவைகளை அருமையாகச்சொல்லீருக்கிறீர்கள்.
தேவா.
என் வலைத்தளம் வருக.http://abidheva.blogspot.com/